"எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுகிறாயே" என்று நாம் பலரைப் பார்த்துச் சொல்கிறோம். பலரும் நம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள்! அப்படியானால் உணர்ச்சிகள் கூடாதா?
உணர்ச்சியில்லாமல் வாழ்வில்லை. ஆசை, காதல், அன்பு, இரக்கம், கோபம், பயம்! இப்படி எல்லாவகை உணர்ச்சிகளும் கலந்ததுதான் வாழ்க்கை! ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு உணர்ச்சிக்கு நாம் ஆட்படுவோம்! அது இயற்கைதான்!
ஆனால், 'என்னை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்' என்று நாம் வருந்தும்படி ஆகிவிடக்கூடாது.
உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கக்கூடாது. அவை நமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்.
விலங்கினங்கள் உணர்ச்சியால் உந்தப்பட்டுத்தான் வாழ்கின்றன. கோபமும் (முடிந்ததால் மோது)பயமும்தான் (முடியாவிட்டால் ஓடு) விலங்குகளின் அடிப்படை உணர்ச்சிகள்!
விலங்குகளின் மூளையில் அமிகதலா என்ற ஒரு பகுதிதான் இந்த உணர்ச்சிகளின் பிறப்பிடம். னம்முடைய மூளையிலும் இதே பகுதி இருக்கிறது. அதைப் போலே செயல்படுகிறது!
ஆனால் நமது மூளையில் நிதானமாக, அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து முடிவெடுக்கும் பகுதிகள் நன்றாகவே வளர்ந்திருக்கின்றன. "நமக்கு நினைவாற்றலும் மிகுதி! ஆனால் ஒன்று இந்த அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து வழிகாட்டும் பகுதி கொஞ்சம் மெதுவாகத்தான் செயல்படும்"
முதலில் கோபம்! அப்புறம்தான் யோசனை! முதலில் பயம்! அப்புறம்தான் நிதானம்! முதலில் அடிதடி! அப்புறம் வாழ்நாளெல்லாம் வருத்தம்!
நாம் உணர்ச்சிவசப்படும் போது, அதற்கு ஏற்ற நிகழ்ச்சியைப் பார்க்கும் போது, கேட்கும் போது, கொஞ்சம் நிதானம் காட்டப் பழக வேண்டும். சில நிமிடங்கள் இடைவெளி கிடைத்தால் கூட போதும். நமது மூளை ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கிவிடும்.
ஆனால், அந்த ஒரு சில நிமிட நிதானத்தை நாம்தான் பழகிக்கொள்ள வேண்டும். இதைத்தான் உணர்வுப் பக்குவம் (Emotional Maturity) என்கிறார்கள்.
வயது ஆக, ஆகத்தான் இப்படிப்பட்ட பக்குவம் எல்லாம் வரும் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
இன்று உளவியல் மிக வேகமாக வளர்ந்திருக்கிறது! சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே உணர்வுப் பக்குவத்தைப் பழகிக்கொள்ள இன்று வழி இருக்கிறது.
இதைப்பற்றி இன்று ஏராளமான செய்திகள்! ஆராய்ச்சிகள்! வானொலி! தொலைக்காட்சி உரைகள்! எனவே இதை நாம் இங்கே மேலும் விவரிக்கத் தேவையில்லை!
ஆனால் ஒரே ஒரு அடிப்படைப் பாடத்தை மட்டும் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வோம்.
எந்த உணர்வானாலும் சரி, அதிக ஆழமாக, அதிகக் காலம் அகப்பட்டுக் கொண்டு அடிமையானால் அதனால் ஆழமான மனக்காயங்களும் தீய விளைவுகளும் உருவாகும்.
எவர் மீதும் அதிகமாகக் கோபப்படாதீர்கள்! எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மன்னித்து மறந்துவிடுங்கள்!
எவருக்கும், எதற்கும் அளவுக்கு மீறிப் பயப்படவேண்டாம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் பயத்திலிருந்து விலகித் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எதன்மீதும், எவர்மீதும் அளவுக்கதிகமான பகையையோ, பொறாமையையோ வளர்த்துக்கொள்ள வேண்டாம். ஏன் அளவுக்கதிகமான வெளித்தனமான அன்புகூட ஆபத்தானதுதான்.
மற்றவர்களை மட்டுமன்று, நம்மையே நாம் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.
நமது கடந்த காலத் தவறுகளையும் ஏமாளித்தனங்களையும் நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. ஏராளமான மன நோயாளிகள் இன்னும் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது!
மொத்தத்தில் நமது மனம் மிகையான உணர்ச்சிகளில் அழுத்திக் கடினப்பட்டுக் போகாமல் காப்பாற்றிக்கொள்வோம்! நமது மனம் கல்லாக உணர்ச்சிகளால் இறுகிப் போக வேண்டாம். மெல்ல மெல்ல கனமில்லாமல், மென்மையாகக் கனியட்டும். சுமையில்லாத வாழ்வுக்கு சுலபமான வழி இது!
No comments:
Post a Comment