23 July 2010

நமக்குள்ளே ஓரு பேராற்றல்

          இந்த உலகையும், உலக இயக்கங்களையும், ஏன் பேரண்டத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிற ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது.
அதை நாம் கடவுள் என்றோ, இயற்கை என்றோ, அல்லா என்றோ, சிவன் என்றோ... எந்தப் பெயர் சொல்லி வேண்டுமானாலும் அழைக்கலாம்.  ஆனால் எந்தப் பெயருக்குள்ளும் அதை அடக்கிவிட முடியாது.
எந்தச் சமய நெறியைப் பின்பற்றியும் அந்தப் பேராற்றலை அடைய முடியும். ஆனால் எந்தச் சமயத்தின் வரையறைக்குள்ளும் அதை அடிக்கிவிட முடியாது.
மெளன மொழி தொடங்கி எந்த மொழி வழியும் கடவுளை நாம் அடைய முடியும். ஆனால் எந்த ‍மொழிக்குள்ளும் அதை அடைத்து வைத்து விட முடியாது.
06102008242நம்மால் இன்னும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாத பழமையான காலம் தொட்டு இந்தச் பெருஞ்சக்தி இயங்கிவருகிறது.  ஆனால் எந்த வகையான பழமைவாத மூட நம்பிக்கைகளுக்குள்ளும், போலித் தனங்களுக்குள்ளும் அதை அடக்கி வைத்து விட முடியாது.
காலந்தோறும் மாற்றங்களுக்கு இடம் தந்து புதுப்புது அர்த்தங்களுடன் புதுப்புது பரிமாணங்களை வெளிக்காட்டி உயிர்த்துடிப்புடன் இருப்பதுதான் இறையாற்றல் - பேராற்றல்.
ஒவ்‍வோர் உயிரும், உயிர்த்துடிப்பும் இந்த உயிர்ப் பேராற்றலின் ஓர் அங்கம்தான்.  நாமும் இந்தப் பேராற்றலின் ஓர் அங்கம்தான்.
நாம் ஒவ்வொருவரும் கடவுளின் ஓர் அங்கமாக மாறி ஒன்றுபட்டுச் செயல்படும்போது, புதுப்புது வளர்ச்சியாக... முன்னேற்றமாக...கண்டுபிடிப்பாக...இப்பேராற்றல் வெளிப்படுகிறது.
இந்த மனிதநேய நெறியைத்தான் ஆன்மீக வளர்ச்சிப் பாதையாக்கக் காலம் காலமாக எல்லாச் சமயங்களும் வலியுறுத்தி வந்திருக்கின்றன.
நமக்குள்ளிருக்கும் இந்த உள்ளொளியைப் புரிந்து கொண்டு முறையாகப் பயன்படுத்தினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்றன.
இன்றைய அறிவியல், உளவியல் கருத்துக்களும் இன்று இ‍தை உறுதிப்படுத்துகின்றன.
"நமது உடல் நோய்கள் பலவற்றுக்கும் நமது மன அழுத்தமும் எதிர்மறைச் செயல்களுமே காரணம் என்று மருத்துவம் சொல்கிறது.  எனவே நம்முடைய மனநிலையைச் சரிப்படுத்துவதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம் எனறு இன்றைய மருத்துவம் சொல்கிறது.
தன்னம்பிக்கையும் நேர்வழிச் சிந்தனைகளும் இரத்தப் புற்று நோய் உள்ளிட்ட பல உடல் நோய்களைக் குணமாக்க முடியும் எனறு இன்று மருத்துவ உலகம் ஒப்பைக்கொள்கிறது.
வழிபாடு, விரதம், தியானம் போன்ற முயற்சிகள் உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் வழி சேர்க்கின்றன. எனவே மாத்திரைகளோடு இந்த உத்திகளையும் இன்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்."
நோயை வெல்வதில் மட்டுமன்று வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதில்கூட இந்த அகத்தூண்டுதல் பயன்படும். தன்னம்பிக்கையோடு நேர்வழியில் சிந்தித்து, நேர்வழியிலேயே உறவாடி ‍நேர்விழயிலேயே செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதுதான் இன்றைய உளவியலின் சாரம்.

01 July 2010

வெற்றிக்கு அடித்தளம் கனவு ...


வெற்றுக் கனவுகள் எவை? வாழ்வில் வெற்றி பெற நாம் காணும் கனவுகள் எப்படிப்பட்டவையாக அ‍மைய வேண்டும்?
வாழ்க்கை என்ற தேர் வெற்றிப் பாதையில் நகர மூன்று குதிரைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும் அறிவு, உணர்வு, செயல்திறன்.
உணர்வுத் திறனையும் அறிவுக் கூர்மையையும் வளர்த்துக் கொள்ளும் வழிகளைப்பற்றி இதுவரை பார்த்தோம்.
செயல்திறன் என்கிற குதிரைதான் மையமாக இருக்க ‍வேண்டிய குதிரை. பல சிறந்த, அறிவாற்றல் நிறைந்த சிந்தனையாளர்கள் கூடத் தூங்கி வழிந்து தோற்றுப் போவதை நாம் பார்க்கிறோம். நல்ல உணர்வுப் பக்குவம் உடையவர்கள் கூடச் செயல்படாவிட்டால் பயனில்லை.thinkrs
எனவே வெற்றிக்குச் செயல்திறன் மிக மிக அவசியம். வெற்றிக்கு வழிகாட்டும், பல நூல்கள் இன்று வெளிவருகின்றன. இவை பெறும்பாலும் செயல்திறன் வளர்ச்சி பற்றித்தான் வலியுறுத்துகின்றன.
வெற்றிக்கு அடித்தளம் கனவு என்கிறார்கள்! உயர்ந்த கனவு! லட்சியக் கனவு! நெடு நோக்குடைய கனவு! ஆனால் கனவு மட்டும் போதுமா? கனவு மெய்ப்பட வேண்டாமா? அதற்கு என்ன செய்வது?
நம்மில் பலரும் ஆசைப்படுகிறோம். கனவும் காண்கிறோம்! நான் மட்டும் ஒரு கோடீசுவரனாக இருந்தால்... நான் மட்டும் முதலமைச்சரானால்...
இது வெறும் பகல் கனவு! செயலுக்கு வழி ஏதும் வகுக்காத கனவு!வெற்றுக் கனவு!
இப்படிப்பட்ட கனவுகள் பல நேரங்களில் கையில் இருப்பதையும் அழித்துவிடும்! ஒரு கதை! கேள்விப்பட்டிருந்ததாலும் இங்கே நினைவுப்படுத்திக் கொள்வோம்.
முட்டை விற்பதற்காகத் தலையில் கூடையுடன் நடந்து போகிற பெண் பகற்கனவு காண்கிறாள்! அதிக லாபம் பெற்று... மேலும் அதிக முட்டை விற்று முட்டைக்கடையே வைத்து... வீடு கட்டி... நகை போட்டு... ‍ஜொலிப்பேன்... என்னைக் கட்டிக் கொள்ள ஆண்கள் வரிசையில் வருவார்கள்... மாட்டேன் மாட்டேன் என்று தலையை ஆட்டுவேன்... என்று தலையை ஆட்டிப் பார்த்தாள்.  முட்டைக்கூடை கீ‍ழே விழுந்தது.  முட்டைகள் உடைந்து நொறுங்கின. இது முட்டையில் கட்டிய கனவுக்கோட்டை.
இன்னும் சிலர் அவசரக் கனவு காண்கிறார்கள்... பணத்தை இரட்டிப்பாக்கும் உத்தி... பல தவறான குறுக்கு வழிகள்... இப்படிப்பட்ட குறுக்குவழிக் கனவுகள் எங்கே கொண்டு போய்விடும்... உள்ளத்தையும் இழந்து விட்டு நடுத்தெருவுக்கு வருவதைத் தவிர வேறு வழி?
இன்னும் சிலர் எதையாவது செய்து கொண்டிருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்புகிறார்கள்... இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்! ஓடி ஆடி அலைந்து கொண்டே இருப்பார்கள்! கடைசியில் என்ன மிச்சம் என்று கேளுங்கள்! ஒன்றும் இருக்காது!
ஓர் இளைஞன் எதிரே வந்த பெரியவரைப் பார்த்துக் கேட்டானாம், இந்தப் பாதை எங்கே போகிறது?
பெரியவர் கேட்டார், தம்பி நீ எங்கே போக வேண்டும்?
பையன் குறிப்பாக எங்குமில்லை.
பெரியவர் சொன்னார் அப்படியானால் போய்க்கொண்டிரு, இந்தப் பாதை எங்குப் போனால் என்ன?
இன்று இந்த இளைஞனைப் போலத்தான் நிறையப் போர் இருக்கிறோம்.  ஒவ்வொரு நாளும் மளமளவென்று எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோம்.  எதற்காகச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம் என்று தெரியாமலேயே பல வேலைகளைச் செய்கிறோம்.
பகல் கனவு! குறுக்கு வழிக் கனவு! தெளிவில்லாத கனவு! செயல்படாமல் மந்திரத்தில் மாங்காய் காய்த்துவிடும் என்று ஜோதிடத்தை நம்பிக் காத்துக்கிடக்கும் சோம்பல் கனவு!
இந்தக் கனவுகள் எதுவும் நமது வெற்றிக்குப் பயன்படாது.
நாம் நிச்சயம் கனவு காண வேண்டும். இளம் வயது முதலே சிறந்த இலட்சியக் கணவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்! ஆனால் அது செயல்படுத்தக் கூடிய கனவாக இருக்க வேண்டும். செயலுக்குரிய அடுத்தக் கட்டங்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டக் கூடிய கனவாக இருக்கவேண்டும்.
எங்கே எப்படிப் போகவேண்டும் என்பதைப் படிப்படியாக பட்டியலிட்டு சுட்டிக்காட்டும் கனவாக இருக்கவேண்டும்.
பகல் கனவு, குறுக்கு வழிக் கனவு, அவசரக் கனவு, சோம்பல் கனவு என வெற்றுக் கனவுகள் பலவகை! நாம் காணும் வெற்றிக் கனவு தெளிவானதாக, விரிவானதாக, படிப்படியாகச் செயலுக்கு வழிகாட்டக் கூடியதாக இருக்க வேண்டும்.