31 December 2010

நமது வாழ்வில் உணர்ச்சிகள் எந்த அளவுக்குத் தேவை? அ‍வை எப்போது ஆபத்தானவையாக மாறுகின்றன?


"எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுகிறாயே" என்று நாம் பலரைப் பார்த்துச் சொல்கிறோம்.  பலரும் நம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள்! அப்படியானால் உணர்ச்சிகள் கூடாதா?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! அது உணர்ச்சிக்கும் பொருந்தும்.feeling
உணர்ச்சியில்லாமல் வாழ்வில்லை. ஆசை, காதல், ‍அன்பு, இரக்கம், கோபம், பயம்! இப்படி எல்லாவகை உணர்ச்சிகளும் கலந்ததுதான் வாழ்க்கை! ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு உணர்ச்சிக்கு நாம் ஆட்படுவோம்! அது இயற்கைதான்!
ஆனால், 'என்னை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்' என்று நாம் வருந்தும்படி ஆகிவிடக்கூடாது.
உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கக்கூடாது. அவை நமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்.
விலங்கினங்கள் உணர்ச்சியால் உந்தப்பட்டுத்தான் வாழ்கின்றன. கோபமும் (முடிந்ததால் மோது)பயமும்தான் (முடியாவிட்டால் ஓடு) விலங்குகளின் அடிப்படை உணர்ச்சிகள்!
விலங்குகளின் மூளையில் அமிகதலா என்ற ஒரு பகுதிதான் இந்த உணர்ச்சிகளின் பிறப்பிடம். னம்முடைய மூளையிலும் இதே பகுதி இருக்கிறது. அதைப் போலே செயல்படுகிறது!
ஆனால் நமது மூளையில் நிதானமாக, அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து முடிவெடுக்கும் பகுதிகள் நன்றாகவே வளர்ந்திருக்கின்றன. "நமக்கு நினைவாற்றலும் மிகுதி! ஆனால் ஒன்று இந்த அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து வழிகாட்டும் பகுதி கொஞ்சம் மெதுவாகத்தான் செயல்படும்"
முதலில் கோபம்! அப்புறம்தான் யோசனை! முதலில் பயம்! அப்புறம்தான் நிதானம்! முதலில் அடிதடி! அப்புறம் வாழ்நாளெல்லாம் வருத்தம்!
நாம் உணர்ச்சிவசப்படும் போது, அதற்கு ஏற்ற நிகழ்ச்சியைப் பார்க்கும் போது, கேட்கும் போது, கொஞ்சம் நிதானம் காட்டப் பழக வேண்டும். சில நிமிடங்கள் இடைவெளி கி‍டைத்தால் கூட போதும். நமது மூளை ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கிவிடும்.
ஆனால், அந்த ஒரு சில நிமிட நிதானத்தை நாம்தான் பழகிக்கொள்ள வேண்டும். இதைத்தான் உணர்வுப் பக்குவம் (Emotional Maturity) என்கிறார்கள்.
வயது ஆக, ஆகத்தான் இப்படிப்பட்ட பக்குவம் எல்லாம் வரும் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
இன்று உளவியல் மிக ‍வேகமாக வளர்ந்திருக்கிறது! சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே உணர்வுப் பக்குவத்தைப் பழகிக்கொள்ள இன்று வழி இருக்கிறது.
இதைப்பற்றி இன்று ஏராளமான செய்திகள்! ஆராய்ச்சிகள்! வானொலி! தொலைக்காட்சி உரைகள்! எனவே இதை நாம் இங்கே மேலும் விவரிக்கத் தேவையில்லை!
ஆனால் ஒரே ஒரு அடிப்படைப் பாடத்தை மட்டும் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வோம்.
எந்த உணர்வானாலும் சரி, அதிக ஆழமாக, அதிகக் காலம் அகப்பட்டுக் கொண்டு அடிமையானால் அதனால் ஆழமான மனக்காயங்களும் தீய விளைவுகளும் உருவாகும்.
எவர் மீதும் அதிகமாகக் கோபப்படாதீர்கள்! எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மன்னித்து மறந்துவிடுங்கள்!
எவருக்கும், எதற்கும் அளவுக்கு மீறிப் பயப்படவேண்டாம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் பயத்திலிருந்து விலகித் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எதன்மீதும், எவர்மீதும் அளவுக்கதிகமான பகையையோ, பொறாமையையோ வளர்த்துக்கொள்ள வேண்டாம்.  ஏன் அளவுக்கதிகமான வெளித்தனமான அன்புகூட ஆபத்தானதுதான்.
மற்றவர்களை மட்டுமன்று, நம்மையே நாம் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.
நமது கடந்த காலத் தவறுகளையும் ஏமாளித்தனங்களையும் நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. ஏராளமான மன நோயாளிகள் இன்னும் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது!
மொத்தத்தில் நமது மனம் மிகையான உணர்ச்சிகளில் அழுத்திக் கடினப்பட்டுக் போகாமல் காப்பாற்றிக்கொள்வோம்! நமது மனம் கல்லாக உணர்ச்சிகளால் இறுகிப் போக வேண்டாம்.  மெல்ல மெல்ல கனமில்லாமல், மென்மையாகக் கனியட்டும். சுமையில்லாத வாழ்வுக்கு சுலபமான வழி இது!

24 December 2010

ஓவ்வொருவருக்கும் உளவியல்


மன நோயாளிகளைப் பற்றிய நமது சமூகப் பார்வை மிக மிகத் தவறானதாகவே இருக்கிறது. நம் சொந்தக் குடும்பத்தைச் ‍சேர்ந்த மன நோயாளிகளைக்கூட நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அவர்களை மதிப்பதில்லை. மன நல மருத்துவரிடம் கூட்டிச் செல்வதில்லை. அவர்களைக் கட்டிபோட்டுத் துன்பைறுத்துகிறோம்! அடித்து உதைக்கிறோம். கடவுள் முன் அவர்களைக் கட்டிப்போட்டு வதைக்கிறோம்.CMHRimage
இந்த மனப்பாங்கு மாற வேண்டும். உண்மையில் மன நோயும் ஒரு வகை உடல் நோய்தான். நரம்பு மண்டலக் குறைபாடு காரணமாக ஏற்படும் நோய்! மருந்து, மருத்துவம், அன்பு, பாதுகாப்பு மூலம் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்த முடியும். மனநோயாளிகளில் மிகமிகச் சிறிய சதவிகிதத்தினர் மட்டும்தான் முரட்டுத்தனமாகச் செயல்படுவார்கள்.  இவர்களை மருத்துவ மனைகளில் வைத்துக் குணப்படுத்தலாம்.
மூளை, நரம்பியல் குறைபாடுகள் இன்று எல்லாத்தரப்பு மக்களிடையிலும், எல்லா வயதிலும் கண்டறியப்படுகின்றன. மருத்துவம் மூலம் சரி செய்யப்படுகின்றன. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்! தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் இளைஞர்கள்! நினைவாற்றலை இழக்கும் முதியவர்கள்! இவர்களுக்கெல்லாம் இன்று உளவியல் துணை நிற்கிறது!
இப்படிப்பட்ட நரம்பியல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மட்டும்தான் உளவியலா? இல்லை, எல்லோருக்குமா?
நம் ஒவ்வொருவருக்கும் உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அ‍‍தேபோல் மன நலமும் முக்கியம்!
உடல் நலத்தைப் பாதுகாக்க பல வழிகள் இருப்பதுபோல் மன நலத்தைப் பாதுகாக்கவும் பல வழிகளை நமது முன்னோர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
இறை வழிபாடு நமது மன நலத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது!‍தோல்வியையும் துன்பத்தையும் கண்டு துவண்டு போகாமலிருக்க வழிபாடு துணை நிற்கிறது!
வெற்றிக் களிப்பில் வரும் ஆணவத்தால் நாம் அழிந்து போகாமல் இருக்கவும் தன்னடக்கத்தை வளர்க்கவும் வழிபாடு பயன்படுகிறது.
மன ‍அழுத்தம், மன இறுக்கத்தைக் குறைக்கத் தியான முறைகள் பயன்படுகின்றன! எத்தனை எத்தனை வகையான தியான முறைகள்! அவற்றுக்கு உலகெங்கும் இன்று எவ்வளவு பெரிய வரவேற்பு.
இப்படிக் காலம் காலமாக நமது மனநல வளர்ச்சிக்குப் பயன்பட்டு வந்த வழிபாடு, தியானம், தத்துவம் சார்ந்த பல்வேறு முயற்சிகளின் இன்றைய அறிவியல் வடிவம்தான் உளவியல். இன்றைய உளவியல் வல்லுநர்கள் ‍நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதோடு நிற்பதில்லை.
இன்றைய அவசர உலகில், உணர்வுகள் பாதிக்கப்பட்டு, உறவுகள் சிதைவடைந்து வாழும் பலருக்கும் உளவியல் மருத்துவம் செய்கிறது. ‍அத்தோடு ஆலோசனையும் கூறி வழிகாட்டுகிறது.
குடும்கச் சிக்கல்கள், கனவன், மனைவி, குழந்தைகளின் உறவு மேம்பட உதவி! அலுவலக மன உளைச்சலிலிருந்து விடுபட வழிமுறைகள்! முதியவர் மனநலப் பயிற்சிகள்! மாணவர், தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சிகள்!
இப்படி நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உளவியல் வழி காட்டுகிறது!
ஆன்மீகவாதிகள் பலரும் இன்று இந்த உளவியல் நெறிகளுடன் கலந்து நமக்கு வழிகாட்ட முன் வருகிறார்கள்.
நம் ஒவ்வொருவருக்கும் மனநலம் முக்கியம். ஆன்மீக வழியிலோ, உளவியல் வழியிலோ அல்லது .இரண்டும் கலந்த வழியிலோ, நமது மன நலத்தைப் பேணி வளர்த்துக் கொள்வோம்.
நம் மனநலத்தைப் பேணி வளர்ப்பது எப்படி? நல்ல கேளிவிதான்! இதற்கு விடை தேடும் முன்னால் ‍வேறொரு கேள்வி!
நமக்கு வாழ்க்கை இனிக்கிறதா? கசக்கிறதா?

15 December 2010

நமது வாழ்வின் வெற்றிக்குப் புத்திசாலித்தனம் (I.Q) மட்டும் போதுமா? வேறு என்ன பண்புகள் வேண்டும்?

          நம்மைச் சுற்றியிருக்கும் சூழலை மாற்றுவதைவிடச் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு வெற்றி பெறுவதுதான் சிறந்தது என்று பார்த்தோம். சரிதான்!
நாம் சூழலை எப்படிப் புரிந்து கொள்வது? அதற்கேற்ப நம்மை எப்படி மாற்றிக் கொள்வது? எப்படிச் செயல்படுவது? எப்படி வெற்றி பெறுவது?
நாம் நம் ஒவ்வொருவரையுமே ஒரு தேருக்கு ஒப்பிடலாம். அந்தத் தேரை மூன்று குதிரைகள் ஒன்றுகூடி நகர்த்துகின்றன.
ஒன்று அறிவு, புத்திசாலித்தனம், அறிவுக்கூர்மை.
நாம் எந்நதத் துறையில் வெற்றி பெற வேண்டும் என்றாலும், அதற்குரிய அறிவு வேண்டும்.  இதுதான் நமது தேருக்குத் தேவையான முதல் குதிரை.craft3horse-01
ஆனால் அறிவுடையவர்கள் எல்லாம் வெற்றி பெற்று விடுகிறார்களா? எத்தனையோ புத்திசாலிகளின் வாழ்க்கை படுதோல்வியில் முடித்திருக்கிறது.
நெடுங்காலமாக அறிவை (Intelligence) மட்டும்தான் ஒருவரது வெற்றிக்கு அடிப்படை என்று கருதி வந்தார்கள். நம் ஒவ்வொருவரின் அறிவுக்கூர்மையை அளப்பதற்கும் முயன்றார்கள். அறிவுக்கூர்மைக் கோவை(Intelligence Quotient (or) IQ) என்று குறியீட்டையே இதற்காக உருவாக்கினார்கள்.
உலகில் உள்ள எல்லா மனிதர்களின் வெற்றி வாய்ப்புகளையும் இந்த IQவை வைத்து அளந்துவிடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் நடக்கவில்லை.
கடந்த முப்பது வருடங்களில் நம்முடைய அ‍றிவுக்கூர்மையைவிட, நம்முடைய உணர்வுப் பக்குவம், நாம் வெற்றி பெறப் பெரிதும் பயன்படுகிறது என்பதை உளவியல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
நம்முடைய குறைநிளைகளோடு நாம் நம்மையே ஏற்றுக்கொள்கிறோமா? நம்மீதே நம்பிக்கை இருக்கிறதா? ‍கோபம், பயம் போன்ற உணர்வுகளை நம்மால் வெற்றி கொள்ள முடிகிறதா?
மற்றவர்களிடம் நாம் எப்படிப் பேசுகிறோம்? பழகுகிறோம்? போட்டி என்று வரும்போது அதை எப்படி நளினமாகக் கையாள்கிறோம்?
இவையெல்லாம் நமது வெற்றி வாய்ப்பை நிச்சயம் மாற்றுமல்லவா? அன்றாட வாழ்க்கையில் இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறார்கள்! நல்ல பிள்ளை பிழைத்துக் கொள்வார் என்றெல்லாம் உணர்வுப் பக்குவம் நிறைந்தவர்களை நாம் பாராட்டுகிறோம்! வரவேற்கிறோம்!
இந்த உணர்வுப் பக்குவம்தான் நமது வெற்றித் தேரின் இரண்டாவது குதிரை.  இதைப் பற்றியும் நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. அறிவுக் கோவையைப் போல (IQ) உணர்வுக் கோவையை (Emotional Quotient- EQ) மதிப்பிடும் உத்திகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அறிவும், மற்றவர்களுடன் உறவாடும் பாங்கும் மட்டும் இருந்துவிட்டால் போதுமா? வெற்றிப் பாதையைத் திட்டப்படி அடைய விடாமுயற்சி வேண்டுமல்லவா? எடுத்த காரியத்தை முடிவு வரை தொடரும் திறன் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும் திறன், இவையெல்லாம் வேண்டுமே!
இந்த விடாமுயற்சிதான் நமது வெற்றித்தேரின் மூன்றாவது குதிரை. விடாமுயற்சிக் கோவை (Persistence Quotient-PQ) என்று இதை அழைக்கிறார்கள். நமது வெற்றித்தேர் நன்றாக ஓட வேண்டுமானால் அறிவுக்கூர்மை, உணர்வுப் பக்குவம், விடாமுயற்சி ஆகிய மூன்று குதிரைகளையும் நாம் நன்றாக வளர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
இந்த மூன்று குதிரைகளையும் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்

03 December 2010

நமது சூழலைப் புரிந்து கொண்டு, எப்படி அதற்கு ஏற்றபடி வாழ்வது? நமக்கு ஏற்றபடி சூழலை மாற்ற முயல்வது? எது சரியானது?


வாழ்க்கை எனும் ஓடம்,  வழங்குகின்ற பாடம்! மானிடரின் வாழ்வினிலே மறக்கவொண்ணா வேதம்!
ஒரு பழைய படப்பாடல் வரிகள்... கண்ணதாசன் வரிகளா?
‍தெரியவில்லை! ஆனால் நம் வாழ்வைப் பற்றிய பல உண்மைகளைப் புரிந்துகொள்ள இந்த ஒப்பீடு பயன்படும்! ஓடம் என்பது சிறிய படகு! பெரும்பாலும் ஒருவரோ, மிகச்சிலரோ ஓட்டிச் செல்லக்கூடியது!
நமது வாழ்க்கைப் படகை நாம்தான் ஓட்டிச் செல்ல வேண்டும்! நம் ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு தனிப்படகு, எங்கோ எப்போதோ தொடங்கிப் பயணம் செய்து, எப்போதோ முடியப்போகிற அல்லது மூழ்கப்போகிற ஒரு படகு!
நமது வாழ்க்கைப் படகை நாம்தான் ஓட்டியாக வேண்டும்! எப்படி ஓட்டுகிறோம்? எதை நோக்கி ஓட்டுகிறோம்? எவ்வளவு விரைவாக ஓட்டுகிறோம்? என்பதெல்லாம் நம்கையில்தான்.
ஆனால் அடிப்படையாக ஒன்றை நாம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்! ஓடம் அல்லது படகுதான் நம்கையில் இருக்கிறது. நம் வாழ்வு மட்டும்தான் நம் கையில் இருக்கிறது. அதை நாம் எப்படியும், எந்தத் திசையிலும், எந்த வேகத்திலும் ஒட்டலாம்!
அதுமட்டுமன்று! நம்மைப்போன்ற பல ஓடக்காரர்கள் அ‍தே ஓடையில் தங்கள் வாழ்க்கைப் படகை ஓட்டிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மைச் சுற்றிப் பயணம் செய்யும் இவர்கள் கூட எப்படித் தங்கள் ஓடங்களை ஓட்ட வேண்டும் என்று நாம் கட்டளை போட முடியாது. அவரவர் போக்கில் அவரவர் பயணம்!
இந்த ஓடங்களுக்கு நடுவில்தான் நாம் பயணம் செய்தாக வேண்டும். இப்பின்னனில் நம்முடைய வாழ்க்கைப் படகை நாம் எப்படி ஓட்டுகிறோம்?
நாம் ஓவ்வொருவரும் ‍எப்போதும் ஒரே மாதிரி நம் வாழ்க்கைப் படகை ஓட்டுவதில்லை. சில நேரம் வேகம், சில நேரம் சோர்வு இது இயற்கைதான்.  ஆனால் பெரும்பாலும் நம் வாழ்க்கை ஒரு பழக்கமான வழித்தடத்தில்தான் நகர்த்துகிறோம்.
பலரும் தங்கள் வாழ்க்கையை ஓடையின் போக்கிலேயே விட்டுவிடுகிறார்கள்! விதி விட்ட வழி என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்தால் சாகிறார்கள்!
சிலர் ஓடையும் காற்றும் சரியாக வரட்டும்... ஓடையில் மற்றப் பகுதிகளின் கூட்டம் குறையட்டும்... அமைதியான சாதகமான சூழல் உருவாகட்டும்... அதற்குப் பிறகு பயணம் செய்யலாம் என்று கரையில் ஒதுங்கிக் காத்துக் கிடக்கிறார்கள்! அலை ஓய்ந்தபின் குளிக்கப் போகறிவர்கள் இவர்கள். அலை எப்போது ஓய்வது? இவர்கள் எப்போது வாழ்வாங்கு வாழ்வது?
சிலர் படுவேகமாகப் பயணம் செய்ய முயல்கிறார்கள். ‍அதிவேகமாக முன்னேறுகிறார்கள்! பல சமயங்களில் பெரும் வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஓடை இவர்களின் ஓடத்தையே கவிழ்த்து விடுகிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல எதிர்பாராத சூழல்களையும், வெள்ளங்களையும், புயல்களையும் சமுதாய ஓடை கொண்டு வரக்கூடும். ‍அதிக வேகம் அதிகமான விபத்துக்களுக்கும் இடமளிக்கும்.
சிலர் தங்கள் வாழ்க்கைப் படகு எந்தப் பக்கம், எப்படிப் போகவேண்டும், என்றெல்லாம் கனவு காண்பார்கள். திட்டம் போடுவார்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கைப் படகை, அப்பா, அம்மா, ஆசிரியர், நண்பர்கள், குடும்பத்தினர் என்று மற்றவர்கள் எல்லாம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.  அவரவர் சுமையை அவரவர் சுமந்தால் போதாதா? மற்றவர்களையே சார்ந்திருப்பவர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும்? சிலர் தத்தம் வாழ்க்கைப் படகை ஓட்டுவதை விட்டுவிட்டு மற்றவர்களைத் திருத்தவும் வழிகாட்டவும் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள்! ஊருக்காகப் போராடுகிறேன் என்று சொல்லிப் பலநேரம் தங்கள் வாழ்க்கைப் படகையே கவிழ்த்து விடுவார்கள்!
வேறு சிலர் மற்ற வாழ்க்கைப் படகுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், தங்கள் சுயநலம் ஒன்றையே மையமாக வைத்து முன்னேறுவார்கள். இந்தச் சுயநலமிகளுக்கு நட்புக் குறையும்! பகைமை பெருகும்! காலப்போக்கில் இவர்கள் பகைமைப் புயலில் சிக்கித் தவிப்பார்கள்.
மிகச் சிலர்தான், சமுதாய ஓடையின் நெளிவு சுளிவுகளை நன்றாகப் புரிந்துகொண்டு, தங்கள் வாழ்க்கைப் படகையும் செம்மையாக வழிநடத்தி, தங்களைச் சுற்றி இருப்பவர்களையும், சார்ந்து இருப்பவர்களையும் அரவணைத்துக்கொண்டு, தங்கள் வாழ்க்கை ஓடத்தில் வெற்றிகரமாகப் பயணம் செய்கிறார்கள்.
நம்முடைய வாழ்க்கைப் பயணமும் அப்படிப்பட்டதாக அமைய வேண்டுமா?