24 December 2010

ஓவ்வொருவருக்கும் உளவியல்


மன நோயாளிகளைப் பற்றிய நமது சமூகப் பார்வை மிக மிகத் தவறானதாகவே இருக்கிறது. நம் சொந்தக் குடும்பத்தைச் ‍சேர்ந்த மன நோயாளிகளைக்கூட நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அவர்களை மதிப்பதில்லை. மன நல மருத்துவரிடம் கூட்டிச் செல்வதில்லை. அவர்களைக் கட்டிபோட்டுத் துன்பைறுத்துகிறோம்! அடித்து உதைக்கிறோம். கடவுள் முன் அவர்களைக் கட்டிப்போட்டு வதைக்கிறோம்.CMHRimage
இந்த மனப்பாங்கு மாற வேண்டும். உண்மையில் மன நோயும் ஒரு வகை உடல் நோய்தான். நரம்பு மண்டலக் குறைபாடு காரணமாக ஏற்படும் நோய்! மருந்து, மருத்துவம், அன்பு, பாதுகாப்பு மூலம் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்த முடியும். மனநோயாளிகளில் மிகமிகச் சிறிய சதவிகிதத்தினர் மட்டும்தான் முரட்டுத்தனமாகச் செயல்படுவார்கள்.  இவர்களை மருத்துவ மனைகளில் வைத்துக் குணப்படுத்தலாம்.
மூளை, நரம்பியல் குறைபாடுகள் இன்று எல்லாத்தரப்பு மக்களிடையிலும், எல்லா வயதிலும் கண்டறியப்படுகின்றன. மருத்துவம் மூலம் சரி செய்யப்படுகின்றன. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்! தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் இளைஞர்கள்! நினைவாற்றலை இழக்கும் முதியவர்கள்! இவர்களுக்கெல்லாம் இன்று உளவியல் துணை நிற்கிறது!
இப்படிப்பட்ட நரம்பியல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மட்டும்தான் உளவியலா? இல்லை, எல்லோருக்குமா?
நம் ஒவ்வொருவருக்கும் உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அ‍‍தேபோல் மன நலமும் முக்கியம்!
உடல் நலத்தைப் பாதுகாக்க பல வழிகள் இருப்பதுபோல் மன நலத்தைப் பாதுகாக்கவும் பல வழிகளை நமது முன்னோர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
இறை வழிபாடு நமது மன நலத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது!‍தோல்வியையும் துன்பத்தையும் கண்டு துவண்டு போகாமலிருக்க வழிபாடு துணை நிற்கிறது!
வெற்றிக் களிப்பில் வரும் ஆணவத்தால் நாம் அழிந்து போகாமல் இருக்கவும் தன்னடக்கத்தை வளர்க்கவும் வழிபாடு பயன்படுகிறது.
மன ‍அழுத்தம், மன இறுக்கத்தைக் குறைக்கத் தியான முறைகள் பயன்படுகின்றன! எத்தனை எத்தனை வகையான தியான முறைகள்! அவற்றுக்கு உலகெங்கும் இன்று எவ்வளவு பெரிய வரவேற்பு.
இப்படிக் காலம் காலமாக நமது மனநல வளர்ச்சிக்குப் பயன்பட்டு வந்த வழிபாடு, தியானம், தத்துவம் சார்ந்த பல்வேறு முயற்சிகளின் இன்றைய அறிவியல் வடிவம்தான் உளவியல். இன்றைய உளவியல் வல்லுநர்கள் ‍நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதோடு நிற்பதில்லை.
இன்றைய அவசர உலகில், உணர்வுகள் பாதிக்கப்பட்டு, உறவுகள் சிதைவடைந்து வாழும் பலருக்கும் உளவியல் மருத்துவம் செய்கிறது. ‍அத்தோடு ஆலோசனையும் கூறி வழிகாட்டுகிறது.
குடும்கச் சிக்கல்கள், கனவன், மனைவி, குழந்தைகளின் உறவு மேம்பட உதவி! அலுவலக மன உளைச்சலிலிருந்து விடுபட வழிமுறைகள்! முதியவர் மனநலப் பயிற்சிகள்! மாணவர், தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சிகள்!
இப்படி நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உளவியல் வழி காட்டுகிறது!
ஆன்மீகவாதிகள் பலரும் இன்று இந்த உளவியல் நெறிகளுடன் கலந்து நமக்கு வழிகாட்ட முன் வருகிறார்கள்.
நம் ஒவ்வொருவருக்கும் மனநலம் முக்கியம். ஆன்மீக வழியிலோ, உளவியல் வழியிலோ அல்லது .இரண்டும் கலந்த வழியிலோ, நமது மன நலத்தைப் பேணி வளர்த்துக் கொள்வோம்.
நம் மனநலத்தைப் பேணி வளர்ப்பது எப்படி? நல்ல கேளிவிதான்! இதற்கு விடை தேடும் முன்னால் ‍வேறொரு கேள்வி!
நமக்கு வாழ்க்கை இனிக்கிறதா? கசக்கிறதா?

No comments:

Post a Comment