02 March 2011

அறிவுக்கூர்மையை வகைப்படுத்த முடியுமா? புத்திசாலித்தனம் எத்தனை வகை?

எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா! என்று பாடக் கேட்டிருக்கிறோம். மகிழ்ச்சியும், இன்பமும் தருகின்ற எத்தனையோ வாய்ப்புகள் உலகில் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அறிவு மட்டும் ஒரே ஒரு வகையாக இருக்க முடியுமா?
படித்தவர்கள் மட்டும்தான் ‍அறிவுடையவர்கள் என்று பொதுவாகச் சொல்லிக் கொள்கிறோம்! இது எவ்வளவு மேலோட்டமான சிந்தனைப் போக்கு!
அடிப்படைக்கல்வி நிச்சயம் எல்img_education_bigலோருக்கும் தேவை. உயர்நிலை, மேல்நிலைக் கல்வியை நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்! நாட்டில் படிக்காத ஒரு பிள்ளை கூட இருக்கக் கூடாது. சரிதான்.
ஆனால், வாழ்க்கைக்கு இந்தப் படிப்பும் இதைத்தாண்டிய பட்டங்களும் மட்டும் போதாது. ஒவ்வொருவரும், அவரவர் வாழ்வுக்குத் தேவையான அறிவுக் கூர்மையை, புத்திசாலித்தனத்தை (Intelligence) வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். சிறந்த விளையாட்டு வீரர், இசைமேதை, பாடகர், சிறந்த நடிகர், ஓவியர், வியாபாரி, பேச்சாளர், சிறந்த மருத்துவர், சிற்பி, ஆசிரியர், அரசியல்வாதி, சிறந்த கட்டக் கலைஞர், போர் வீரர்! இவர்கள் எல்லாரும் புத்திசாலிகள்தானே!
இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகைப் புத்திசாலித்தனம் மேலோங்கி நிற்கிறது ‍அந்தத் துறையில் அவர்கள் தங்கள் அறிவுக் கூர்மையை வளர்த்துக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
நரம்பியல் (Neuroscience) அறிஞர்கள் கடந்த சில ஆண்டுகளில் இந்த புத்திசாலித்தனங்கள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள்.
எல்லா வகைப் புத்திசாலித்தனங்களையும் இவர்கள் ஏழு பொது வகைகளாக வகைப்படுத்தி இருக்கிறார்கள்.smintelligence
1.கணிதம், தர்க்கம் (Mathematical Logical) கணினித்துறை, பல்வேறு பொறியியல் ஆய்வுத்துறைகள், நீதித்துறை சிக்கல்களைத் தீர்க்கும் திறன்...
2.‍‍மொழித்திறன், பேச்சுத்திறன் (Linguistics,Oratory) சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், படைப்பாளிகள்..
3.ஓவியம், சிற்பப் பார்வை (painting, Sculpture) ஓவியர்கள், சிற்பிகள், கட்டட வடிவமைப்பாளர்கள், உட்புற அழகுக் கலைஞகர்கள்...
4.உடலியக்கம் (Kinesics) விளையாட்டு வீரர்கள், நடன, நாடகக் கலைஞர்கள், அழகிகள், ஆண் அழகர்கள், போர் வீரர்கள்...
5.இசை, தாளலயம் (Musical Rythmic) நல்ல பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இசை வல்லுநர்கள்...
6.அக ஆய்வாளர்கள் (Intra Personal) தத்துவ மேதைகள், தியான வல்லுநர்கள், மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்கள், மன நல மருத்துவர்கள்...
7.மனித உறவு (Inter Personal) பல்வேறு வகை வணிகர்கள், பல்வேறு வகைக் கலைஞர்கள், அரசியல்வாதிகள், நல்ல ஆசிரியர்கள்...
நம் ஒவ்‍வொருவருக்கு உள்ளேயும் இந்த ஏழு வகை அறிவுக் கூர்மைகளில் குறைந்தபட்சம் ஒன்றாவது ஒளிந்து கொண்டிருக்கிறது.
இந்த உள்ளார்ந்த திறமையை (Innate Talent) இளமையிலேயே அடையாளம் கண்டு வளர்த்துக் கொண்டால் நாம் நிச்சயம் அந்தத் துறையில் வெற்றி பெறலாம்!
நமது குழந்தைகள் எல்லாரும் ஒரே ஒரு குறிப்பிட்ட துறையில்தான் முன்னுக்கு வரவேண்டும் என்று நாம் ‍அடம்பிடிக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அவர்களை வளர விடலாமே!
இளம் வயதிலே கோட்டை விட்டு விட்டோமே என்று கவலைப்படத் தேவையில்லை. எந்த வயதிலும் நாம் ஏதாவது ஒரு துறையில் நமது அறிவுக்கூர்மையை வளர்த்துக் கொண்டு வெற்றி பெற முடியும்.
சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட அ‍றிவுக்கூர்மையை பெற்றவர்களாக இருப்பார்கள். சிலர் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு துறையில் வல்லுநர்களாக இருப்பார்கள் பிறகு வேறொரு அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள். பொறியியல் வல்லுநர் எழுத்தாளராக மாறலாம் (எழுத்தாளர் சுஜாதா) நடிகர் அரசியல்வாதி ஆகலாம்.
விஞ்ஞானி மனித வள மேம்பாட்டு வல்லுநராக மாறலாம் (குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்) படிப்பு மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல என்பதை ஆழமாக மனதில் பதிய வைப்போம். நமக்கு ஏற்ற புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்வோம். புத்திசாலிகள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை மதித்துப் போற்றக் கற்றுக்கொள்வோம்.

No comments:

Post a Comment