03 November 2010
வாழ்க்கை சுமையா? சுவையா? அதை நாமே சுவையாக மாற்றிக் கொள்ள முடியுமா? எப்படி
பாகற்காய் கசக்கும்தான்! ஆனால் அதை விரும்பிச் சாப்பிடுபவர்கள் ஏராளம். பாகற்காயின் மருத்துக் குணங்களுக்காக அல்ல! கசப்பைச் சுவைப்பவர்களே ஏராளம்.
சர்க்கரை இனிப்புதான்! ஆனால் இனிப்பை வெறுப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். தங்களுக்குச் சர்க்கரை நோய் இருப்பதால் இனிப்பை வெறுப்பவர்களைச் சொல்லவில்லை! இனிப்புச் சுகையே பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள்.
வாழ்க்கை கசக்கிறதா? இனிக்கிறதா? என்ற கேள்விக்குரிய பதிலும் இப்படிப்பட்டதுதான்.
ஒரே வகுப்பு! ஒரே பாடம்! சிலருக்குப் பாடம் பிடிக்கிறது. சிலருக்குப் பிடிக்கவில்லை! காரணம் பாடமா அல்லது படிப்பவரின் மனநிலையா?
பலர் தேர்வை எழுதுகிறார்கள். முதல் மதிப்பெண் கிடைக்கவில்லையே என்று பலர் அழுகிறார்கள்! கடைசி வரிசையில் பலர் வழக்கம் போல் சிரிக்கிறார்கள். காரணம் மதிப்பெண்களா? மனநிலையா?
கடன் ஒரு பெரிய வாழ்க்கைச் சுமைதான். என் நண்பர் ஒருவர் பல சகோதரிகளுக்கு மணம் முடித்துத் தந்தையாய் நின்றவர். கடன் சுமையில்லா நாளில்லை! ஆனால் எப்போதும் மகிழ்ச்சிப் புன்னகை. "கடன் சுமையைச் சுமப்பதே ஒரு சுவையாகிப் போய்விட்டது" என்கிறார்!
மகிழ்ச்சியாக வாழும் ஏழைகளும் உண்டு!
சோகத்தில் மூழ்சியிருக்கும் பணக்காரர்களும் உண்டு!
படித்த ஏமாளிகளும் உண்டு! படிக்காத மேதைகளும் உண்டு!
வாழ்க்கை சுவையா, சுமையா என்பது நாம் எங்கே எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தது அன்று! நமது சூழல் நமக்குச் சாதகமாக இருக்கிறதா என்பதைப் பொறுத்ததும் அன்று!
வாழ்வின் சுவையும் சுமையும் நமக்கு வெளியே இல்லை! அது நமக்குள்ளே இருக்கிறது! சுவைக்க தெரிந்த மனிதருக்கு வாழ்க்கை கரும்பு! சுவைக்கத் தெரியாத மனிதருக்கு அதுவே கற்பாறை!
வாழ்க்கை சுவையானது என்று நாம் உறுதியாக நம்பினால் அது சுவையானதுதான். அதுவே சுமையானது என்று நாம் உறுதியாக நம்பினால் அது நிச்சயம் சுமையானதுதான்.
வாழ்க்கை சுமை என்று நாம் உறுதியாக நம்பினால் அது நிச்சயம் (Negative Thinking) எதிர்மறைப் பார்வை (Negative Outlook) என்பார்கள்.
இந்தப் பார்வை உடையவர்கள் தங்களையே நம்ப மாட்டார்கள். துணிச்சலாகப் புதிய முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள்.
முன்னேறுபவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள், குமுறுவார்கள், மற்றவர்களையும் நம்ப மாட்டார்கள்! இவர்களுக்கு நல்ல உறவும் நட்பும் குறைவாகவே இருக்கும்.
மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை இவர்களைப் பற்றிக் கொள்ளும். மன இறுக்கம் தொடர்பான இரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் இவர்களைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
வாழ்க்கை சுவை என்று கருதுபவர்களை நாம் நேர்வழிச் சிந்தனையாளர்கள் (Positive Thinkers) என்கிறோம்.
இவர்கள் எப்போதும் புன்னகையோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படுவார்கள். தயங்காமல் புதிய முயற்சிகளில் இறங்குவார்கள். தோல்வியைக் கண்டு கலங்க மாட்டார்கள்.
தங்கள் முயற்சிகளில் மற்றவர்களையும் சேர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு எல்லா பக்கங்களிலும் நட்பும் உதவியும் காத்திருக்கும்.
மிகக்கடுமையான நோய்கள்கூட இவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்காது! இத்தகைய மனநலம் அதிசயிக்கத் தகுந்த உடல் நலத்தைக் கொடுப்பதும் உண்டு.
நமக்குத் தேவை வாழ்வு சுமை என்கிற சரிவுப் பார்வை அன்று! வாழ்க்கை சுவை என்கிற உயர்வுப் பார்வைதான்!
Subscribe to:
Post Comments (Atom)
அட நல்லாயிருக்கே :)
ReplyDeletePeople with 20 million are not happy than people with 10 million
ReplyDeletemihavum arputham
ReplyDelete