ஓவ்வொரு தனி மனிதருக்கும் சில குறைகள் இருக்கலாம்! அவற்றை நம் முன்னேற்றத்துக்குத் தடைகள் என்று நாம் கருதிக் கலங்கத் தேவையில்லை. எந்தக் குறையையும் வென்று காட்டமுடியும். இதைத்தான் நாம் ஆதாரங்களோடு இதுவரை பார்த்தோம்.
ஆனாலும் இவையெல்லாம் உண்மையான குறைபாடுகள்! வாழ்வின் எதார்த்தம்! போலிகள் அல்ல!
ஆனால் இல்லாத குறைகளையும் தடைகளையும் கண்டு நம்மில் எத்தனை பேர் மயங்குகிறோம்!
புகை மூட்டத்தைப் பூதமாகக் கருதி நடுங்குபவர் நம்மில் எத்தனை பேர்?
கடவுள் பெயரால் எத்தனை சண்டைகள்! கொள்ளைகள், உயிர்ப் பலிகள்.
பேயும் பூதமும் எங்கே இருக்கின்றன? கோழைகள், ஏமாளிகளின் மனதில் மட்டும்தானே இருக்கின்றன? ஆனால் பேய் ஓட்டுவதாகச் சொல்லும் எத்தைனை போலித்தனங்கள்? ஏமாற்று வித்தைகள்?
கடவுள் நமக்கு வழங்கியிருக்கும் கொடைதானே நேரம்? ஒரு நிமிடத்தை இழந்து விட்டால் அதை நம்மால் திரும்பப் பெற முடியுமா? நாம் வாழக் கிடைத்திருக்கிற ஒவ்வொரு நொடியையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?
ஜாதகம், ஜோசியம், குறி, கோடங்கி போன்றவற்றைத் தேடி நம்மில் எத்தனை பேர் அலைகிறோம்? எத்தனை பேர் கடவுள் கொடுத்த நேரத்தை எமகண்டம், ராகு காலம் என்று வீணடிக்கிறோம்?
நம் தலை எழுத்தை நாமே நிர்ணயிப்பதா? தம் பிழைப்பிற்கே வழியில்லாமல் ஆலமரத்தடியில் உட்கார்ந்திருக்கும் குறிகாரர்களும் ஜோதிடர்களும் நிர்மாணிப்பதா?
இன்று நம்மை ஏமாற்ற எத்தனை எத்தனை போலிகள் புதிதாகக் கிளம்பி இருக்கிறார்கள்?
உங்கள் பெயரில் இரண்டு எழுத்தைக் கூட்டினால், குறைத்தால், மாற்றினால் உங்கள் குறை எல்லாம் தீரும் என்கிறார்கள். அப்படியானல் ஒரே பெயரைக் கொண்ட எல்லாரும் ஒரே வாழ்க்கைத் தரத்தைப் பெற முடியுமா?
மோதிரக்கல்தான் உங்கள் வெற்றியின் ரகசியம் என்கிறார்கள்! வண்ணம் பூசப்பட்ட சாயக்கற்கள் வண்டி வண்டியாய் விலை போகின்றன!
வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் சேர்த்து ஒரு வீட்டைக் கட்டுகிறோம்! அந்த வீட்டை, வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் இடித்து, உடைத்து நம்மை மீண்டும் ஓட்டாண்டி ஆக்குகிறார்கள்!
இந்த வகையான ஏமாற்று வேலைகள் ஏராளமாக நடக்கின்றன! நவீன அறிவியலின் எல்லாக் கருவிகளையும் பயன்படுத்திக்கொண்டு அறிவியல் பார்வையை மறைக்கப் பார்க்கிறார்கள்!
ஏமாறுவதும்! ஏமாறாமல் தப்பிப் பிழைப்பதும் நம் கையில்தான்!
சரி! நமது வளர்ச்சிக்கு நமது புறச்சூழலான நிஜங்களும் தடையில்லை! இந்த வகைப் போலிகளும் தடையில்லை!
No comments:
Post a Comment