23 July 2010

நமக்குள்ளே ஓரு பேராற்றல்

          இந்த உலகையும், உலக இயக்கங்களையும், ஏன் பேரண்டத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிற ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது.
அதை நாம் கடவுள் என்றோ, இயற்கை என்றோ, அல்லா என்றோ, சிவன் என்றோ... எந்தப் பெயர் சொல்லி வேண்டுமானாலும் அழைக்கலாம்.  ஆனால் எந்தப் பெயருக்குள்ளும் அதை அடக்கிவிட முடியாது.
எந்தச் சமய நெறியைப் பின்பற்றியும் அந்தப் பேராற்றலை அடைய முடியும். ஆனால் எந்தச் சமயத்தின் வரையறைக்குள்ளும் அதை அடிக்கிவிட முடியாது.
மெளன மொழி தொடங்கி எந்த மொழி வழியும் கடவுளை நாம் அடைய முடியும். ஆனால் எந்த ‍மொழிக்குள்ளும் அதை அடைத்து வைத்து விட முடியாது.
06102008242நம்மால் இன்னும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாத பழமையான காலம் தொட்டு இந்தச் பெருஞ்சக்தி இயங்கிவருகிறது.  ஆனால் எந்த வகையான பழமைவாத மூட நம்பிக்கைகளுக்குள்ளும், போலித் தனங்களுக்குள்ளும் அதை அடக்கி வைத்து விட முடியாது.
காலந்தோறும் மாற்றங்களுக்கு இடம் தந்து புதுப்புது அர்த்தங்களுடன் புதுப்புது பரிமாணங்களை வெளிக்காட்டி உயிர்த்துடிப்புடன் இருப்பதுதான் இறையாற்றல் - பேராற்றல்.
ஒவ்‍வோர் உயிரும், உயிர்த்துடிப்பும் இந்த உயிர்ப் பேராற்றலின் ஓர் அங்கம்தான்.  நாமும் இந்தப் பேராற்றலின் ஓர் அங்கம்தான்.
நாம் ஒவ்வொருவரும் கடவுளின் ஓர் அங்கமாக மாறி ஒன்றுபட்டுச் செயல்படும்போது, புதுப்புது வளர்ச்சியாக... முன்னேற்றமாக...கண்டுபிடிப்பாக...இப்பேராற்றல் வெளிப்படுகிறது.
இந்த மனிதநேய நெறியைத்தான் ஆன்மீக வளர்ச்சிப் பாதையாக்கக் காலம் காலமாக எல்லாச் சமயங்களும் வலியுறுத்தி வந்திருக்கின்றன.
நமக்குள்ளிருக்கும் இந்த உள்ளொளியைப் புரிந்து கொண்டு முறையாகப் பயன்படுத்தினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்றன.
இன்றைய அறிவியல், உளவியல் கருத்துக்களும் இன்று இ‍தை உறுதிப்படுத்துகின்றன.
"நமது உடல் நோய்கள் பலவற்றுக்கும் நமது மன அழுத்தமும் எதிர்மறைச் செயல்களுமே காரணம் என்று மருத்துவம் சொல்கிறது.  எனவே நம்முடைய மனநிலையைச் சரிப்படுத்துவதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம் எனறு இன்றைய மருத்துவம் சொல்கிறது.
தன்னம்பிக்கையும் நேர்வழிச் சிந்தனைகளும் இரத்தப் புற்று நோய் உள்ளிட்ட பல உடல் நோய்களைக் குணமாக்க முடியும் எனறு இன்று மருத்துவ உலகம் ஒப்பைக்கொள்கிறது.
வழிபாடு, விரதம், தியானம் போன்ற முயற்சிகள் உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் வழி சேர்க்கின்றன. எனவே மாத்திரைகளோடு இந்த உத்திகளையும் இன்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்."
நோயை வெல்வதில் மட்டுமன்று வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதில்கூட இந்த அகத்தூண்டுதல் பயன்படும். தன்னம்பிக்கையோடு நேர்வழியில் சிந்தித்து, நேர்வழியிலேயே உறவாடி ‍நேர்விழயிலேயே செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதுதான் இன்றைய உளவியலின் சாரம்.

1 comment: