25 March 2011

நம்முடைய முன்னோர்கள் எல்லாருமே நம்மைவிடப் புத்திசாலிகளா? அறிவாளிகளா?


நம்முடைய முன்னோர்கள் எல்லாம் நம்மைவிட அ‍றிவாளிகள்! அவர்களுக்கு எல்லாமே‍ தெரியும்! அவர்களுக்குத் தொரியாததையா இப்போது நாம் கண்டுபிடித்துவிடப் போகிறோம்! இப்படிப் பழம்பெருமை பேசிச் சீரழிகிற மனப்போக்கு நம்மிடம் இருக்கிறது.
பழமை போற்றப்பட வேண்டியதுதான்! மதிக்கப்பட வேண்டியதுதான்! ஆனால் பழமையிலேயே காலூன்றி நிற்க முயலலாமா? அது முடியுமா? அது வளர்ச்சியாகுமா? வளர்ச்சியும் மாற்றமும் இல்லாத எதுவும் உயிர்த்துடிப்பு இல்லாத வெறும் சக்கையாகி விடாதா?
உயிர்த்துடிப்பில்லாத மனிதர் வளர முடியுமா?  உயிர்த்து‍டிப்பில்லாத சமுதாயம்தான் வளர முடியுமா?
அறிவு என்பதே ஒரு தேடல்தான் உண்‍மையைத் தேடும் முயற்சி. இந்தத் தேடல் வாழ்வு முழுவதும் தொடர்கிறது. புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.ashimo
20,000 வருடங்களுக்கு முன்னால் மனிதருக்கு நெருப்புப் பற்ற வைக்கக்கூடத் தெரியாதே! அந்த மனிதர்கள் நம்மைவிட அ‍றிவாளிகளா?
10,000 வருடங்களுக்கு முன்னால் பயிர்செய்யத் தெரியாமல் காட்டில் அலைந்தாரே! அவர் நம்மைவிட அறிவாளியா?
5,000 வருடங்களுக்கு முன்னால் சக்கரங்கள் பூட்டிய வண்டியைக்கூட அறியாது இருந்த மனிதர் நம்மைவிட அறிவாளியா?
100 வருடங்குளுக்கு முன்னாள் தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, விமானம், கார் போன்ற எதையும் அறியாத மக்கள் ‍எல்லாருமே அறிவாளிகளா?
முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் யாருமே அறிவாளிகள் இல்லை என்று நாம் வாதிடவில்லை.
ஒவ்வொரு காலக் கட்டத்திலும், சில குறிப்பிட்ட இடங்களில் சில குறிப்பிட்ட துறைகளில் சில அறிவாளிகள் தோன்றியிருக்கிறார்கள்! நாம் வாழ் வழிகாட்டி இருக்கிறார்கள். சிலர் காலத்தை வென்று இன்றும் நம் நெஞ்சில் இடம் பிடித்திருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் அறிவு என்பது ஒரு சமுதாயச் சொத்து! காலம் கடந்து அது வளர்கிறது! ஒவ்வொரு நாளும் அது வளர்கிறது. ஒவ்வொரு புதிய தலைமுறையும் அதற்கு முந்திய தலைமுறையின் தோளில் ஏறி நிற்கிறது. பழைய தலைமுறையைவிட அதிகமான அறிவைப் பெறுகிறது. தொழில் நுட்பத்தைப் பெறுகிறது.
அறிவென்பது தலைமுறை தலைமுறையாக வளரும் ஓர் ஆலமரம். ஒவ்வொரு அறிவுத்துறையும் மேலும் மேலும் கிளைவிட்டு வளர்ந்து கொண்டே போகிறது. காலம் நகர நகர இந்த வளர்ச்சியின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது.
எனவே நாம் நம் முன்னோர் சொல்லி வைத்த எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதும், அப்படியே பின்பற்றுவதும் சரிதானா?
சோதிடத்திலும், ரேகை பார்ப்பதிலும், குருவி சோதிடத்திலும், மூழ்கிக் கிடக்கலாமா? எண் சோதிடம் நம்மை என்ன செய்யும்? இறைவன் படைத்த உலகில் அவன் வழங்கும் நேரத்தில் கெட்ட நேரம் என்று எதுவும் இருக்க முடியுமா? ‍ பொன் போன்ற காலத்தை வீணடிக்கும் வேதனையல்லவா இது?
குழந்தை வளர்ப்பில் எவ்வளவு மூடநம்பிக்கைகள்! அறிவார்ந்த சமுதாயங்கள் உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றன. பழமைவாதம் பேசி மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயங்கள் பின்தள்ளப்படுகின்றன.
நம் நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது உண்மைதான். ஆனால் அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டாமா?
எனவே நாமும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடுவோம். அறிவுப்பூர்வமாகச் சிந்திப்போம். மற்றவர்களையும் அப்படிச் சிந்திக்கத் தூண்டுவோம்.

1 comment: