15 December 2010

நமது வாழ்வின் வெற்றிக்குப் புத்திசாலித்தனம் (I.Q) மட்டும் போதுமா? வேறு என்ன பண்புகள் வேண்டும்?

          நம்மைச் சுற்றியிருக்கும் சூழலை மாற்றுவதைவிடச் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு வெற்றி பெறுவதுதான் சிறந்தது என்று பார்த்தோம். சரிதான்!
நாம் சூழலை எப்படிப் புரிந்து கொள்வது? அதற்கேற்ப நம்மை எப்படி மாற்றிக் கொள்வது? எப்படிச் செயல்படுவது? எப்படி வெற்றி பெறுவது?
நாம் நம் ஒவ்வொருவரையுமே ஒரு தேருக்கு ஒப்பிடலாம். அந்தத் தேரை மூன்று குதிரைகள் ஒன்றுகூடி நகர்த்துகின்றன.
ஒன்று அறிவு, புத்திசாலித்தனம், அறிவுக்கூர்மை.
நாம் எந்நதத் துறையில் வெற்றி பெற வேண்டும் என்றாலும், அதற்குரிய அறிவு வேண்டும்.  இதுதான் நமது தேருக்குத் தேவையான முதல் குதிரை.craft3horse-01
ஆனால் அறிவுடையவர்கள் எல்லாம் வெற்றி பெற்று விடுகிறார்களா? எத்தனையோ புத்திசாலிகளின் வாழ்க்கை படுதோல்வியில் முடித்திருக்கிறது.
நெடுங்காலமாக அறிவை (Intelligence) மட்டும்தான் ஒருவரது வெற்றிக்கு அடிப்படை என்று கருதி வந்தார்கள். நம் ஒவ்வொருவரின் அறிவுக்கூர்மையை அளப்பதற்கும் முயன்றார்கள். அறிவுக்கூர்மைக் கோவை(Intelligence Quotient (or) IQ) என்று குறியீட்டையே இதற்காக உருவாக்கினார்கள்.
உலகில் உள்ள எல்லா மனிதர்களின் வெற்றி வாய்ப்புகளையும் இந்த IQவை வைத்து அளந்துவிடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் நடக்கவில்லை.
கடந்த முப்பது வருடங்களில் நம்முடைய அ‍றிவுக்கூர்மையைவிட, நம்முடைய உணர்வுப் பக்குவம், நாம் வெற்றி பெறப் பெரிதும் பயன்படுகிறது என்பதை உளவியல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
நம்முடைய குறைநிளைகளோடு நாம் நம்மையே ஏற்றுக்கொள்கிறோமா? நம்மீதே நம்பிக்கை இருக்கிறதா? ‍கோபம், பயம் போன்ற உணர்வுகளை நம்மால் வெற்றி கொள்ள முடிகிறதா?
மற்றவர்களிடம் நாம் எப்படிப் பேசுகிறோம்? பழகுகிறோம்? போட்டி என்று வரும்போது அதை எப்படி நளினமாகக் கையாள்கிறோம்?
இவையெல்லாம் நமது வெற்றி வாய்ப்பை நிச்சயம் மாற்றுமல்லவா? அன்றாட வாழ்க்கையில் இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறார்கள்! நல்ல பிள்ளை பிழைத்துக் கொள்வார் என்றெல்லாம் உணர்வுப் பக்குவம் நிறைந்தவர்களை நாம் பாராட்டுகிறோம்! வரவேற்கிறோம்!
இந்த உணர்வுப் பக்குவம்தான் நமது வெற்றித் தேரின் இரண்டாவது குதிரை.  இதைப் பற்றியும் நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. அறிவுக் கோவையைப் போல (IQ) உணர்வுக் கோவையை (Emotional Quotient- EQ) மதிப்பிடும் உத்திகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அறிவும், மற்றவர்களுடன் உறவாடும் பாங்கும் மட்டும் இருந்துவிட்டால் போதுமா? வெற்றிப் பாதையைத் திட்டப்படி அடைய விடாமுயற்சி வேண்டுமல்லவா? எடுத்த காரியத்தை முடிவு வரை தொடரும் திறன் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும் திறன், இவையெல்லாம் வேண்டுமே!
இந்த விடாமுயற்சிதான் நமது வெற்றித்தேரின் மூன்றாவது குதிரை. விடாமுயற்சிக் கோவை (Persistence Quotient-PQ) என்று இதை அழைக்கிறார்கள். நமது வெற்றித்தேர் நன்றாக ஓட வேண்டுமானால் அறிவுக்கூர்மை, உணர்வுப் பக்குவம், விடாமுயற்சி ஆகிய மூன்று குதிரைகளையும் நாம் நன்றாக வளர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
இந்த மூன்று குதிரைகளையும் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்

1 comment: