03 December 2010

நமது சூழலைப் புரிந்து கொண்டு, எப்படி அதற்கு ஏற்றபடி வாழ்வது? நமக்கு ஏற்றபடி சூழலை மாற்ற முயல்வது? எது சரியானது?


வாழ்க்கை எனும் ஓடம்,  வழங்குகின்ற பாடம்! மானிடரின் வாழ்வினிலே மறக்கவொண்ணா வேதம்!
ஒரு பழைய படப்பாடல் வரிகள்... கண்ணதாசன் வரிகளா?
‍தெரியவில்லை! ஆனால் நம் வாழ்வைப் பற்றிய பல உண்மைகளைப் புரிந்துகொள்ள இந்த ஒப்பீடு பயன்படும்! ஓடம் என்பது சிறிய படகு! பெரும்பாலும் ஒருவரோ, மிகச்சிலரோ ஓட்டிச் செல்லக்கூடியது!
நமது வாழ்க்கைப் படகை நாம்தான் ஓட்டிச் செல்ல வேண்டும்! நம் ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு தனிப்படகு, எங்கோ எப்போதோ தொடங்கிப் பயணம் செய்து, எப்போதோ முடியப்போகிற அல்லது மூழ்கப்போகிற ஒரு படகு!
நமது வாழ்க்கைப் படகை நாம்தான் ஓட்டியாக வேண்டும்! எப்படி ஓட்டுகிறோம்? எதை நோக்கி ஓட்டுகிறோம்? எவ்வளவு விரைவாக ஓட்டுகிறோம்? என்பதெல்லாம் நம்கையில்தான்.
ஆனால் அடிப்படையாக ஒன்றை நாம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்! ஓடம் அல்லது படகுதான் நம்கையில் இருக்கிறது. நம் வாழ்வு மட்டும்தான் நம் கையில் இருக்கிறது. அதை நாம் எப்படியும், எந்தத் திசையிலும், எந்த வேகத்திலும் ஒட்டலாம்!
அதுமட்டுமன்று! நம்மைப்போன்ற பல ஓடக்காரர்கள் அ‍தே ஓடையில் தங்கள் வாழ்க்கைப் படகை ஓட்டிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மைச் சுற்றிப் பயணம் செய்யும் இவர்கள் கூட எப்படித் தங்கள் ஓடங்களை ஓட்ட வேண்டும் என்று நாம் கட்டளை போட முடியாது. அவரவர் போக்கில் அவரவர் பயணம்!
இந்த ஓடங்களுக்கு நடுவில்தான் நாம் பயணம் செய்தாக வேண்டும். இப்பின்னனில் நம்முடைய வாழ்க்கைப் படகை நாம் எப்படி ஓட்டுகிறோம்?
நாம் ஓவ்வொருவரும் ‍எப்போதும் ஒரே மாதிரி நம் வாழ்க்கைப் படகை ஓட்டுவதில்லை. சில நேரம் வேகம், சில நேரம் சோர்வு இது இயற்கைதான்.  ஆனால் பெரும்பாலும் நம் வாழ்க்கை ஒரு பழக்கமான வழித்தடத்தில்தான் நகர்த்துகிறோம்.
பலரும் தங்கள் வாழ்க்கையை ஓடையின் போக்கிலேயே விட்டுவிடுகிறார்கள்! விதி விட்ட வழி என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்தால் சாகிறார்கள்!
சிலர் ஓடையும் காற்றும் சரியாக வரட்டும்... ஓடையில் மற்றப் பகுதிகளின் கூட்டம் குறையட்டும்... அமைதியான சாதகமான சூழல் உருவாகட்டும்... அதற்குப் பிறகு பயணம் செய்யலாம் என்று கரையில் ஒதுங்கிக் காத்துக் கிடக்கிறார்கள்! அலை ஓய்ந்தபின் குளிக்கப் போகறிவர்கள் இவர்கள். அலை எப்போது ஓய்வது? இவர்கள் எப்போது வாழ்வாங்கு வாழ்வது?
சிலர் படுவேகமாகப் பயணம் செய்ய முயல்கிறார்கள். ‍அதிவேகமாக முன்னேறுகிறார்கள்! பல சமயங்களில் பெரும் வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஓடை இவர்களின் ஓடத்தையே கவிழ்த்து விடுகிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல எதிர்பாராத சூழல்களையும், வெள்ளங்களையும், புயல்களையும் சமுதாய ஓடை கொண்டு வரக்கூடும். ‍அதிக வேகம் அதிகமான விபத்துக்களுக்கும் இடமளிக்கும்.
சிலர் தங்கள் வாழ்க்கைப் படகு எந்தப் பக்கம், எப்படிப் போகவேண்டும், என்றெல்லாம் கனவு காண்பார்கள். திட்டம் போடுவார்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கைப் படகை, அப்பா, அம்மா, ஆசிரியர், நண்பர்கள், குடும்பத்தினர் என்று மற்றவர்கள் எல்லாம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.  அவரவர் சுமையை அவரவர் சுமந்தால் போதாதா? மற்றவர்களையே சார்ந்திருப்பவர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும்? சிலர் தத்தம் வாழ்க்கைப் படகை ஓட்டுவதை விட்டுவிட்டு மற்றவர்களைத் திருத்தவும் வழிகாட்டவும் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள்! ஊருக்காகப் போராடுகிறேன் என்று சொல்லிப் பலநேரம் தங்கள் வாழ்க்கைப் படகையே கவிழ்த்து விடுவார்கள்!
வேறு சிலர் மற்ற வாழ்க்கைப் படகுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், தங்கள் சுயநலம் ஒன்றையே மையமாக வைத்து முன்னேறுவார்கள். இந்தச் சுயநலமிகளுக்கு நட்புக் குறையும்! பகைமை பெருகும்! காலப்போக்கில் இவர்கள் பகைமைப் புயலில் சிக்கித் தவிப்பார்கள்.
மிகச் சிலர்தான், சமுதாய ஓடையின் நெளிவு சுளிவுகளை நன்றாகப் புரிந்துகொண்டு, தங்கள் வாழ்க்கைப் படகையும் செம்மையாக வழிநடத்தி, தங்களைச் சுற்றி இருப்பவர்களையும், சார்ந்து இருப்பவர்களையும் அரவணைத்துக்கொண்டு, தங்கள் வாழ்க்கை ஓடத்தில் வெற்றிகரமாகப் பயணம் செய்கிறார்கள்.
நம்முடைய வாழ்க்கைப் பயணமும் அப்படிப்பட்டதாக அமைய வேண்டுமா?

4 comments:

  1. சுயநலமும் பொதுநலமும் கலந்தது தான் வாழ்க்கை.
    ஆனால் அதனை எந்த அளவு கலந்து பயணிக்கிறோம் என்பதில் தான் வாழ்வு அமைகிறது.

    ReplyDelete
  2. நல்ல தத்துவங்கள். வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமானவை. இந்தக் கருத்துக்களை ஆழமாக சிந்தித்து வாழ்க்கையில் கடைப்பிடித்தால் வாழ்வு மேன்மையுறும். ஆனால் இதைப்படிப்பதற்கே எவ்வளவு பேருக்கு பொறுமை இருக்கும்.
    பாராட்டுக்கள்.

    மொக்கைப்பதிவுகளுக்கே இன்று மவுசு.

    ReplyDelete
  3. எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete