25 October 2010

நம் வாழ்வு யார் கையில்..

       நடந்து போகும்போது கீழே விழுகிறோம். ஏன் என்று கேட்கிறார்கள்? என்ன சொல்வோம்?
கல் தடுக்கி விட்டது என்கிறோம்.  கல் மீது தான் பழி, நான் கல்லைக் கவனிக்காமல் இடறி விழுந்தேன் என்று சொல்கிறோமா? நாம் பொறுப்பை ஏற்கிறோமா?
சமையல் சரியில்லை. ஏன்? உப்பு கூடிவிட்டது என்கிறோம்.  நான் உப்பைக் கூடுதலாகப் போட்டு விட்டேன் என்று சொல்வதில்லையே!
மாணவர் தேர்வில் தோற்கிறார்.  ஏன்? வினாத்தாள் கடினமாக இருந்தது என்கிறார். நான் சரியாகப் படிக்கவில்லை என்று ஒப்புக் கொள்வதில்லை. 
இரண்டு வகைப் பதில்களும் ஒன்றுதானே என்று சிலர் நினைக்கலாம். இல்லை!
முதல் வகை பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் முயற்சி.  தவறுகளை, குறைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதன் வெளிப்பாடு!
நான் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்கிறேன்.  எனக்கு எப்போதும் இப்படித் துன்பமே வருகிறது என்று புலம்புவதற்கு அடித்தளம்! வாழ்வில் தொடர்ந்து சரிவுகளைச் சத்திக்கும் வழித்தடம்.
சின்னச் சின்னத் தவறுகளுக்குக்கூட நாமே பொறுப்பேற்றுக் கொள்ளப் பழகுவோம்! ஒவ்வொரு சிறு சிறு தவறையும் திருத்திக்கொள்ள வழி இருக்கிறது.
படிப்படியாக நமது பலவீனங்கள் குறையும்.  பலங்கள் பெருகும். மெல்ல மெல்ல நாம் உயர வழி கிடைக்கும்.
நம்முடைய வாழ்க்கைப் பயணத்திலும்கூட இந்த இருவகை மனப்போக்கையும் பார்க்கலாம்.
சிலர் எப்போதும் புலம்புவார்கள்.
நான் மட்டும் கொஞ்சம் வசதியாகப் பிறந்து இருந்தால்..
என்னை மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாகப் படிக்க வைத்திருந்தால்...
அந்த வேலை மட்டும் எனக்குக் கிடைத்திருந்தால்...
என் மனைவி மட்டும் கொஞ்சம் உருப்படியாக வாய்த்திருந்தால்..
இப்படிப்பட்ட சிந்தனைகளே நமது தோல்வியை ஒப்புடக கொள்வதின் அடையாளம்.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது என்று சொல்லும் வாக்குமூலம்!
நம் தோல்விக்கு மற்றவர்கள்மீது பழிபோடும் முயற்சியின் வெளிப்பாடு மற்றவர்கள் கையில் நம் வாழ்வை ஒப்படைக்கும் அவலத்தின் அடையாளம்.
நமக்குள்ளே இறைவன் தந்திருக்கும் அந்தப் பேராற்றலை நம்பாமல் ஏற்றுக்கொள்ளாமல், பயன்படுத்தாமல் கோட்டை விட்டுவிட்டுப் பரிதவிக்கும் ஏமாறித்தனம்.
கடைசியில் நம் தோல்விக்குக் கடவுள்மீது பழிபோடும் அறியாமை! எனவே நம்முடைய வாழ்வு, நமக்குக் கி‍டைத்திருக்கும் ஒரு கொடை. மிகப்பெரிய வாய்ப்பு. அதை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட வேண்டாம்.
நம் வாழ்வுக்கும், நம் வெற்றிக்கும், நம் மகிழ்ச்சிக்கும் நாமே பொறுப்பெடுத்துக் கொள்வோம்.
குறைகளை ஏற்றுக்‍கொள்வோம்... திருந்துவோம்.. முன்னேறுவோம் நம்முடைய தோல்விக்கும் குறைகளுக்கும் மற்றவர்கள்மேல் பழிபோடும் வழக்கத்தை இன்றே விட்டொழிப்போம்.

3 comments:

  1. நல்ல விசயங்களை பகிர்ந்ததுக்கு நன்றி..பின்பற்றுகிறேன்..

    ReplyDelete
  2. ஏறக்குறைய எல்லா மனிதர்களிடமும் இருக்கும் பலவீனம் தான் இது.
    தாங்களாக உணர்ந்துவிடின் மாற்றம் நிச்சயம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...

    ReplyDelete