01 June 2010

கடவுள் பாதி! மனிதர் பாதி!


            நம் எல்லாரிடமும் இறைப் பண்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் எல்லாரிடத்திலும் எல்லா நேரத்திலும் கடவுள் பண்பு வெளிப்படுவதில்லை.
மிக மிக மோசமானவர்கள் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவர்கள்கூட சில நேரங்களில் மிக அபூர்வமான செயல் திறனையோ, அன்பையோ காட்டி நம்மை அசத்தி விடுவார்கள்.


மிகப்‍பெரிய மகான்கள்கூடச் சில நேரங்களில் சாதாரண மனிதச் சபலங்களுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.
ஒவ்வொருவரிடத்திலும் இறைப் பண்புகளும் மனிதப் பண்புகளும் கலந்துதான் இருக்கின்றன.
இதை நாம் பணிவோடு ஒத்துக்கொள்ள வேண்டும். இதில் கேவலம் எதுவுமில்லை. இதற்கு நாம் மட்டும் தனிப்பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியமில்லை.


நாம் விலங்கினங்களிலிருந்று படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள்தானே. நமது மூளையும் பரிணாம வளர்ச்சியில் விலங்கின மூளையிலிருந்து வளர்ந்து வந்ததுதானே!
விலங்கினத்திலிருந்து நாம் தனிப்பட்டு முன்னேறி வளரத்தொடங்கிப் பத்தாயிரம் ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன.  சுமார் 400 தலைமுறைகள்தான் உருண்டோடி இருக்கின்றன.  இந்த 400 தலைமுறைகளில்தான் நாம் மொழி, நினைவாற்றல், பகுத்தறிவு, ஆன்மீகம் போன்ற திறன்களைப் படிப்படியாக வளர்ந்திருக்கிறோம்.
இந்த வளர்ச்சிகள் தொடர்ந்தாலும் கூட நமது மூளையில் "முடிந்தால் மோது ""முடியாவிட்டால் ஓடு" என்ற சிந்தனைதான் ‍மேலோங்கி நிற்கிறது.  அச்சமும், அடக்கியாளும் வெறியும் அவசர முடிவெடுக்கும் போக்கும் இன்னும் நம்மை விட்டு விலகவில்லை.


மிகச் சிலரது அடக்குமுறைக்குக் கட்டுப்பட்டு, ஏராளமான நம்மைப் போன்ற அ‍டித்தள, நடுத்தட்டு வர்க்க மக்கள், கல்வி அறிவும், சிந்திக்கும் திறனும் இல்லாமல்தான் பல தலைமுறைகள் கழித்திருக்கிறோம்.
மூன்று தலைமுறைகளில்தான் கொஞ்சம் விடுதலைக் காற்றும், கல்வியும், நமது வாழ்க்கைப் போக்கை நாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்திருக்கிறது.  அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்று, வாழ்க்கைத் தரம் உயர உயர நமது வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் பக்குவமடையும்.
மேலை நாடுகள் இந்த வகையில் நிறைய முன்னேறிவிட்டன. அங்கே ஏமாறுபவர்கள் குறைவு எனவே, ஏமாற்றும் வாய்ப்பும் குறைவு. அஞ்சுபவர்கள் குறைவு, எனவே அடாவடித்தனங்களும் குறைவு.


நம்முடைய தமிழகச் சூழலும் இன்று இவ்வகை மாற்றங்களைச் சந்திக்கிறது. நமது வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது.
நாம் ஒவ்வொரும் படிப்படியாக முயன்றால் மனித பலவீனங்களிலிருந்து விடுபட்டு வாழ்வாங்கு வாழலாம்.


வாழப் பழகுவோம் தொடரும்...

1 comment:

  1. ரொம்ப சார்ப்பா எழுதிருக்கிங்க

    ReplyDelete